அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்டியில் இருந்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்டியில் இருந்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதால் கட்சியின் விதியான 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகக் கூடும் என்று தெரிகிறது. இதனால் முதலமைச்சராக சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பொதுச் செயலாளர் அஜய் மேகனும், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர். அதற்கான அறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக அசோக் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வைக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.














