சீனாவில் உள்ள வூஹான் நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு, அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்தது. இந்நிலையில், ஆய்வகத்தின் பாதுகாப்பு குறித்த அறிக்கைகளை வெளியிட மறுத்ததால், இந்த உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் உருவாக்கம் குறித்த ஆய்வுகளுக்கு வூஹான் மையத்திடம் இருந்து முறையான தகவல்கள் தரப்படவில்லை. இது தொடர்பாக வூஹான் ஆய்வு மையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் நிதி உதவியை பெறும் ஆய்வகங்களின் பட்டியலில் இருந்து வூஹான் ஆய்வகம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், வூஹான் நுண் உயிரியல் ஆய்வகத்தில் அமெரிக்க சுகாதாரத்துறை ஆய்வு செய்தது. அதன்படி, அமெரிக்காவின் வழிகாட்டு முறைகளை ஆய்வகம் பின்பற்றவில்லை என அறிவிக்கப்பட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், 2020 ஆம் ஆண்டு, கொரோனா பரவல் தொடங்கிய போதே, வூஹான் மையத்திற்கான நிதி உதவி அமெரிக்காவால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














