சென்னை: ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், வேறு சில வியாதிகளால் உயிரிழந்திருந்தால், அது கொரோனா உயிரிழப்பாக பதிவு செய்ய இயலாது. இருந்தாலும் குடும்பத்திற்கு நிவாரணம் பெறுவதில் தடைகள் இல்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 900க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் ஜனவரி முதல் உயிரிழந்ததாகவும், அவை கொரோனா இறப்பாக பதிவாகவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவ அறிக்கையின்படி பெரும்பாலானோர் புற்றுநோய், உடல் உறுப்பு செயலிழப்பு நோய்களால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இறந்ததாக, கூறப்படுகிறது. உயிரிழக்கும்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்ததன் அடிப்படையில், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு மறு ஆய்வு பணிகளை மேற்கொள்கிறோம். அதனால், உயிரிழப்புக்கான காரணத்துக்கும், கொரோனா நிவாரணம் பெறுவதற்கும் பெரிய அளவிலான தடைகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.