'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கே பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு : புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

October 26, 2022

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2022 ஜூலை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயர்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில், "கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில், "கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்" என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதிலிருந்து, அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu