அரசு மருத்துவமனைகளில் உள்ள கோவிட் வார்டுகளை மீண்டும் முறையாக பராமரிக்க, பொதுப்பணித் துறைக்கு உத்தரவு.
2020 மார்சில் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் அதில் ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டது. இதற்காக, பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் அமைக்கப்பட்டன. தேசிய சுகாதார இயக்க நிதியிலும் அதிநவீன படுக்கை வசதிகளுடன் , 10000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவிட் பரவல் குறைந்ததால் சில இடங்களில் கொரோனா வார்டுகள் மூடப்பட்டன. சில இடங்களில் மற்ற சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இச்சமயம் சர்வதேச அளவில் கோவிட் பரவல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் பூட்டிக் கிடக்கும் கோவிட் வார்டுகளை பராமரிக்கவும், தயார்நிலையில் வைக்கவும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.