கோவின் தளத்தில் உள்ள தனிநபர் தரவுகள், டெலிகிராம் போட் மூலம் கசிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களின் கைப்பேசி எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளன. இதில், திமுக எம்பி கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விவரங்களும் உள்ளதாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவின் தளத்தின் மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த செய்தியை தொடர்ந்து, CloudSek என்று செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் ஆய்வறிக்கை பேசுபொருளாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 18 அன்று வெளியான இந்த அறிக்கையின் படி, உலக அளவில், சுகாதார அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்களில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, “கோவின் மூலமாக தகவல் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில், சுகாதாரத்துறை புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. சீரான முறையில் இந்த பயணம் அமையாததால், சைபர் தாக்குதல்களுக்கு சாதகமாக கோவின் தளம் மாறி உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.














