இந்தியாவில் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.41% ஆக பதிவாகியுள்ளது. பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்வதை மத்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த தவறியுள்ளது. எனவே, இது குறித்த விளக்கங்களை அரசிடம் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4.35% ஆக பதிவாகி இருந்தது. அதுவே, இந்த வருடத்தில் 7.41% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. கிராமப்புற பணவீக்கம் 7.56 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 7.27 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் ஒவ்வொரு மாதமும் பணவீக்க விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாத தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை ஆய்வு செய்து பேசிய, ஐ சி ஆர் ஏ வின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர், “தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, 2 - 6% என்ற நிர்ணயிக்கப்பட்ட விளிம்பு நிலைக்கு மேலே பணவீக்கம் நிலை பெற்றுள்ளதால், மத்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “உணவு பணவீக்கம் 22 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இவ்வருட செப்டம்பர் மாதத்தில், 8.4 சதவீதமாக உணவு பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும். அத்துடன், அக்டோபர் மாத தொடக்கத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இது உணவு பணவீக்கத்திலும் எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.