தென் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு பிரட்டி புயல் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் லாசரஸ் சகுவேரா, பேரிடர் மீட்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளுக்கு உலகளாவிய உதவி கூடுதலாக தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, மலாவியில் ஏற்பட்ட பிரட்டி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 400 கடந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. புயல் பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 183159 இதிலிருந்து இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயலால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் பல சடலங்கள் உள்ளதாகவும், அழுகிய நிலையில் உள்ள உடல்களை மீட்க கடும் சிரமம் எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.