பிப்பர்ஜாய் புயல் காரணமாக குஜராத் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, 2 பேர் பலியாகியுள்ளனர்.
பிப்பர்ஜாய் புயல் குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்தது. அப்போது காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் புயலால் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பிப்பர்ஜாய் புயல் தற்போது வடகிழக்கு நோக்கி ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து பாலைவனத்தை அடையும் நேரத்தில் வலுவிழந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என்றும், இதே நேரத்தில் ராஜஸ்தானில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.














