தமிழகத்தில் தொழில் தொடங்க செக் குடியரசு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், அரசுமுறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் எம்எஸ்வி கண்காட்சியில் பங்கேற்க அக்.3-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார்.
செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிகத் துறை செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்து எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் குழுவினர், எவெக்டார் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஆய்வின்போது அந்நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வரும்படி அமைச்சர் அழைப்பு விடுத்தார். அதன்பின், எம்எஸ்வி கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் வி.அருண்ராய், நிதித் துறை துணை செயலாளர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.