தமிழகத்தில் தினசரி மின் பயன்பாடு 18,252 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 2.67 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். விவசாயத்துக்கு தேவைப்படும் 2,500 மெகாவாட் உட்பட மாநிலத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வீடுகளில் குளிரூட்டி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம், பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் தொடங்கியது போன்ற காரணங்களால் மார்ச் 15-ம் தேதி 17,647 மெகாவாட், மார்ச் 16-ம் தேதி 18,053 மெகாவாட் என மின்பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தினசரி மின்நுகர்வு 18,252 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.