தெற்கு சீனாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 1,10000-க்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் தெற்கு மாகாணமான லாங்டாங்கில் கடுமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சுமார் 1,10000-க்கும் அதிகமானோர் தங்கள் இடங்களை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25,800 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் 1.6 மில்லியன் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16 முதல் பியர்ல் நதியின் டெல்டா பகுதியில் கடும் மழை பெய்தது. வரலாறு காணாத அளவு மழை இந்த ஏப்ரல் மாதத்தில் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இங்கு எப்பொழுதுமே கடும் மழை பெய்யும் என்ற போதிலும் கடந்த சில ஆண்டுகளாக கடும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் சுமார் 44 ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அபாய எல்லை தாண்டி ஆற்றின் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.