பூஞ்சை தொற்றுகள் உலகெங்கிலும் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பூஞ்சை தொற்றுகள், "அமைதியான தொற்றுநோய்" என அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் 3.8 மில்லியன் மக்களை பலி கொள்ளும் அளவுக்கு ஆபத்தானது. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நார்மன் வான் ரிஹின், இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
பாக்டீரியாவை விட பூஞ்சைகள் மிகவும் சிக்கலானவை என்பதால், இவற்றிற்கான மருந்துகளை உருவாக்குவது மிகவும் கடினம். தற்போது நான்கு வகையான பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன. ஆனால், பூஞ்சைகள் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், ஆஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் மற்றும் கேண்டிடா போன்ற பூஞ்சை தொற்றுகள் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லிகளும் இந்த எதிர்ப்பை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்று தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.