துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். நிலநடுக்கம் என்னும் இயற்கை பேரழிவினால் பாதிப்புக்குள்ளாகி நிலைகுலைந்து போய் உள்ள இந்த நாடுகளுக்கு உலக நாடுகள் பலவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்டியுள்ளது.