ஐநா காலநிலை உச்சி மாநாட்டிற்காக எகிப்தில் உள்ள COP27 மாநாட்டிற்கு தனியார் ஜெட் மூலம் பிரதிநிதிகள் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களில் 400 க்கும் மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள் COP27 மாநாட்டிற்காக எகிப்தில் தரையிறங்கியுள்ளன என்று எகிப்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் மூலம் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து சமூக தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. சிலர் தனியார் ஜெட் விமானங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். COP27 இல் 33,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவம்பர் 5 அன்று, நூற்றுக்கணக்கான காலநிலை ஆர்வலர்கள் மிதிவண்டிகளில் வந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டம் கிரீன்பீஸ் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளால் நடத்தப்பட்டது.
இதற்கு காரணம் தனியார் ஜெட் விமானங்களில் பயணிப்பவர்கள், வணிக விமானங்களில் பயணிப்பதை விட தனிநபர் கிரகத்தை வெப்பமயமாக்கும் உமிழ்வை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். அதாவது, ஒரு தனியார் ஜெட் ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். வணிக விமானத்தை விட ஐந்து முதல் 14 மடங்கு அதிகமாக மாசுபடுத்துகிறது.
இது குறித்து விஞ்ஞானிகள், 'மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றம் வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரழிவுகளை உண்டாக்கிறது. இத்தகைய உமிழ்வுகள் குறைக்கப்படாவிட்டால் வரும் பத்தாண்டுகளில் தீவிரமடையக்கூடும்' என்று கூறுகின்றனர்.