இந்தியாவில் முதல் முறையாக, தானியங்கி முறையில் இயங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை டெல்லி மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது. இது சனிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பு டி என் ஆர் சி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல், இரு நிறுவனங்களும் இதற்காக இணைந்து பணியாற்றி வருகின்றன. மேலும், இது ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் முன்னெடுப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோவின் ‘ரெட் லைன்’ பகுதியில் இந்த கண்காணிப்பு அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அமைப்பின் சேர்மன் மனோஜ் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், இதனை வரலாற்று நிகழ்வாக பதிவு செய்துள்ளார்.