நைஜீரியா நாட்டில், கடந்த அக்டோபர் மாதத்தில், புழக்கத்திலிருந்த 200, 500 மற்றும் 1000 நைரா நோட்டுகள் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புழக்கத்தில் உள்ள பழைய நைரா நோட்டுகளை மாற்றுவதற்கு பிப்ரவரி 20ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20,000 நைரா மட்டுமே சில வங்கிகளில் வழங்கப்படுகின்றன. மேலும், போதிய அளவில் புதிய நைரா நோட்டுகள் கொண்டுவரப்படவில்லை. இதனால், மக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல், வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல வங்கிகளில் கூட்டம் அலைமோதுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பண மதிப்பிழப்புக்கு எதிராக நைஜீரியாவில் போராட்டங்கள் வலுத்துள்ளன. ஆனாலும், இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.














