டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தண்ணீர் தேங்காத சூழல் ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு தொற்று வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து, மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு வளர்ச்சி கட்டுப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.














