வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, விமானப் போக்குவரத்து தீவிர பாதிப்புக்கு உள்ளாகியது. புதன்கிழமை அன்று, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 100 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. விமானங்கள் தாமதமாக புறப்பட்டும்/தரையிறங்கியும் பதிவாகின. சில விமானங்கள் அருகில் உள்ள மற்றொரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட / தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே, விடுமுறை நாட்களில் டெல்லி விமான நிலையம் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மோசமான வானிலை காரணமாக, விமானங்களின் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று, டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக, விமானப் போக்குவரத்து மட்டுமின்றி ரயில் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14 ரயில்கள் தாமதமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.