தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டதில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன.
தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி, நெல்லை ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு வெள்ள நீர் வடிந்து வருகிறது. இதனால் தற்போது தண்டவாளங்கள் மற்றும் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இதற்கு இடையில் செயல்பட்டு வரும் 21 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர்- திருநெல்வேலி, மணியாச்சி-திருச்செந்தூர், திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-நாகர்கோவில், திருநெல்வேலி-தூத்துக்குடி, செங்கோட்டை-திருநெல்வேலி உள்ளிட்ட 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் நாகர்கோவில் - கன்னியாகுமரி செல்லும் குமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்,கன்னியாகுமரி, புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை வரை இயக்கப்பட்டது. அதேபோன்று திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.