மும்பையைச் சேர்ந்த ஸ்பேஸ் ஆரா ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (Space Aura Aerospace Technology Private Limited) என்ற நிறுவனம், வரும் 2025 ஆம் ஆண்டில், விண்வெளி சுற்றுலாவை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீதான ஈர்ப்பில் இந்த இந்திய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விண்வெளி சுற்றுலாவை விரும்புபவர்களை இந்தியா நோக்கி வரச் செய்யும் ஏற்பாடாக இது பார்க்கப்படுகிறது. விண்வெளிச் சுற்றுலா மற்றும் இந்திய கலாச்சார சுற்றுலா இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இந்த நிறுவனத்தின் அறிவிப்பு உள்ளது.
விண்வெளி சுற்றுலாவுக்காக பிரத்தியேக பலூன் போன்ற விண்கலத்தை இந்த நிறுவனம் வடிவமைக்க தொடங்கியுள்ளது. சுமார் 10 X 8 அடி கொண்ட பலூன் ஒன்றில், விமானி தவிர்த்து 6 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் போன்ற விண்கலம் பூமியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும். இந்தக் கலத்தில், அதிநவீன உயிர் காக்கும் உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் இந்த பலூன் விண்கலம் பூமியில் இருந்து மேலே உந்தப்படும். கடல் மட்டத்திலிருந்து 30 முதல் 35 கிலோமீட்டர் வரை இது செல்லும். அங்கு, சுற்றுலா பயணிகள், பூமியின் வளைவான தோற்றம் மற்றும் விண்வெளியின் கருப்பு நிறம் ஆகியவற்றை ஒரு மணி நேரத்திற்கு கண்டுகளிக்கலாம். அதன் பிறகு, ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, பாராசூட் மூலம் விண்கலம் பூமிக்குள் இறங்கும். பின்னர், விண்கலத்திலிருந்து பலூன் வெளியேற்றப்பட்டு, விண்கலம் பாதுகாப்பாக நிலப்பகுதியை வந்தடையும். ஸ்பேஸ் ஆரா நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் பொர்வால், இந்த தகவல்களை தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்பேஸ் ஆரா நிறுவனம், SKAP 1 என்ற பெயரில் சோதனை முறையிலான பலூன் விண்கலத்தை “ஆகாஷ் தத்துவா” என்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து பேசிய ஆகாஷ் பொர்வால், விண்வெளி சுற்றுலா குறித்து இஸ்ரோ மற்றும் டிஐஎஃப்ஆர் விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு இடங்கள் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ப்ளூ ஆர்ஜின் போன்ற விண்வெளி சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போதைய நிலையில், கட்டணங்கள் குறித்து உறுதியான தகவல்களை கணிக்க முடியாது என்றாலும், 50 லட்ச ரூபாய் வரையில் கட்டணம் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.