நீரிழிவுக்கான மலிவு விலை மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு 'சிட்டாகிளிப்டின்' 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரைகள் 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மி.கி., 10 மாத்திரைகள் 100 ரூபாய்க்கு கிடைக்கும். அதோடு சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைட் கலந்த 50 மி.கி., மற்றும் 500 மி.கி., 10 மாத்திரைகள் 65 ரூபாய்க்கும், 1000 மி.கி., கொண்ட 10 மாத்திரைகள் 70 ரூபாய்க்கும் விற்கப்படும்.
நீரிழிவு குறைபாடு உடையோர் தற்போது 162 முதல் 258 ரூபாய் வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்குகின்றனர். இந்த மலிவு விலை மாத்திரைகள் பிரதமர் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.
இந்த மருந்தகங்கள் நாடு முழுதும் 8,700 இடங்களில் செயல்படுகிறது. இங்கு மலிவு விலையில் 1,600க்கும் மேற்பட்ட தரமான மருந்துகள் மற்றும் 250 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.