கிழக்கு மாகாணங்களில் வீடுகள் இடிந்து 6,700க்கும் மேற்பட்டவை சிதைவடைந்தன; ஆயிரக்கணக்கானோர் காயம்.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குனார் மற்றும் நாங்கர்ஹர் மாகாணங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 6,782 வீடுகள் முற்றிலும் இடிந்து சிதைந்துள்ளன. அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல கிராமங்கள் நிலச்சரிவுகள் மற்றும் இடிபாடுகளால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் மீட்பு படைகள் அங்கு சென்றடைவது கடினமாகியுள்ளது. அந்தப் பகுதிகளில் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக இந்த நிலநடுக்கம் கருதப்படுகிறது.