எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பது குறித்து பாலமுருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்திலும், இதுபோன்ற குற்ற வழக்குகள் விசாரிக்கப்படவில்லை. எனவே சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்க வேண்டிய குற்ற வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திற்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கும் அங்கு நிலுவையில் உள்ளது. இந்த மனுவை புதிய இடையீட்டு மனுவாக மனுதாரர் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொதுநல மனுவாக தாக்கல் செய்ய வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.














