தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கண்டனம் தெரிவித்து, வரும் பிப்ரவரி 25 அன்று மாநிலம் முழுவதும் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த போராட்டத்துக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க மறுக்கிறது என கூறப்பட்டதை திமுக மாணவரணி கண்டித்து, தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கல்வித் துறைக்கான நிதி வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை ‘இளைஞர் எழுச்சி நாளாக’ கொண்டாடவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும், மதவாத சதிகளை முறியடிக்கவும் மாணவரணி முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை பாதிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுக் செயல்படுவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.