சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணை கொடுக்கவேண்டாம் என்று மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கைப்பேசி எண், வங்கி கணக்கு எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணை பகிரும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் அதற்கான ஓ.டி.பி.யையும் அளிக்க வேண்டாம்.
ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் 'லாக்கிங்' செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைபடும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.