அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையின் வரம்பு தற்போது 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதற்கு அதிகமாக நன்கொடை பெற்றால், அது யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். இந்த வரம்பை 2,000 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அரசியல் கட்சிகள் பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதம் அல்லது 20 கோடி ரூபாய், இவற்றில் எது குறைவோ அந்த தொகையை மட்டுமே ரொக்கமாக பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.