சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.மேலும் ரூபாய் 269 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜு ஜோய்ஷர் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர். இதில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கலந்து கொண்டார். மேலும் ஒப்பந்தத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதனை வழித்தடம் 4ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் பராமரித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.