பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெண்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசு, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்கள் மீதான வரிகளை குறைத்துள்ளது.
இலங்கை தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதன் விளைவாக கடுமையான உணவு மற்றும் மின்சார பற்றாக்குறை, எரிபொ௫ள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுடன் போராடி வருவதால், அண்டை நாடுகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. எனவே சானிட்டரி நாப்கின் மீதான வரியை இலங்கை அரசு குறைத்துள்ளது.
அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை குறைக்கப்படும். ஒரு பேக்கின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 - ரூ.270 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் சில்லறை விலைகள் 18 சதவீதம் அல்லது 19 சதவீதம் குறைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














