ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, பல்வேறு நோய்களை தீர்க்க வல்லதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனை நிரூபிக்கும் வகையில், மூன்றாவதாக ஒரு நபர் எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே லுக்கிமியா பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பாதிப்பும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையின் போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெர்லின் மற்றும் லண்டனை சேர்ந்த இரு வேறு நோயாளிகளுக்கு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜர்னல் நேச்சர் மெடிசின் என்ற இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இதழில், “53 வயதான ஒருவருக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, 3 வருடங்களுக்குப் பிறகு, தீவிரமான ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் (லுக்கிமியா) கண்டறியப்பட்டது. அதன் பின்னர், 2013 ஆம் ஆண்டு அவருக்கு போன் மேரோ மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சிசிஆர் 5 என்ற அரிய வகை மரபணு கொண்ட பெண்ணின் ஸ்டெம் செல்கள் அவருக்கு மாற்றி வைக்கப்பட்டன. இந்த குறிப்பிட்ட மரபணு, எச்ஐவி நோய்க்கிருமியை தடுத்து நிறுத்தும் என்று கருதப்பட்டது. அது தற்போது உறுதியாகியுள்ளது. 2018 முதல் அவருக்கு எச்ஐவி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு எச்ஐவி நோய்க்கிருமி அவரது உடம்பில் கண்டறியப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க்கில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை, எச்ஐவி சிகிச்சையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில், பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஒரு முன்னெடுப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.














