கூகுள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களை சார்ந்த துரித வர்த்தக நிறுவனமான டன்சோவில், 50% ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 6 மாதங்களில், 400 ஊழியர்களை டன்சோ நிறுவனம் நீக்கி உள்ளது. இந்த பரபரப்பு நீங்குவதற்குள், பாதிக்கும் மேலான தனது ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 1000 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், 500 ஊழியர்களுக்கு, கடந்த ஜூன் மாதத்தில் சம்பள குறைப்பு நடந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பள குறைப்பில் தலைமை பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகளே மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு பாக்கி சம்பளம் ஜூலை 15ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இரு மடங்கு இழப்பை சந்தித்துள்ள டன்சோ நிறுவனம், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.














