துருக்கி மற்றும் சிரியா பகுதியில் நேற்று முதல் தொடர்ச்சியாக பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த நிலநடுக்கங்கள் குறித்து முன்கூட்டியே டச்சு விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளது தெரியவந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியா பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்கள் முன்னதாக, பிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, இது குறித்து எச்சரித்துள்ளார். அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை இட்டுள்ளார். அதில், "தென் மத்திய துருக்கி, ஜோர்டான், லெபனான், சிரியா ஆகிய பகுதியில் உடனடியாகவோ தாமதமாகவோ 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். மேலும், நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர் அதிர்வுகள் உணரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள சூரிய முறை வடிவியல் ஆய்வு மையத்தில் இவர் பணியாற்றி வருகிறார். அவர் கணித்தபடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் பணியாற்றும் நிறுவனம் ஏற்கனவே பிப்ரவரி 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் எனவும், இது ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறியிருந்த தகவலை ரீட்வீட் செய்துள்ளார்.