லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) நடத்திய புதிய ஆய்வின்படி, புகைபிடித்தல் மனித ஆயுளை கணிசமாகக் குறைக்கிறது. ஒவ்வொரு சிகரெட்டும் ஆண்களின் ஆயுளை 17 நிமிடங்களும், பெண்களின் ஆயுளை 22 நிமிடங்களும் குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் சுமார் 7 மணி நேர ஆயுளை குறைக்கிறது. இதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் சுமார் 10 வருடங்களையும், ஆரோக்கியமான நடுத்தர வயதையும் இழக்கின்றனர்.
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு புகைப்பிடிப்பதை நிறுத்தினால், பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ஒரு வார கால ஆயுளை மீட்டெடுக்கலாம் மற்றும் ஆண்டு இறுதிக்குள் 50 நாட்களை மீட்டெடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, புகையிலை உலகளவில் ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமானோரின் உயிரைப் பறிக்கிறது. இதில் 1.3 மில்லியன் பேர் இரண்டாம் கை புகையினால், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புகைப்பிடிப்பை முற்றிலும் நிறுத்துவது மிகவும் அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.