டிசம்பர் 7, 2024 அன்று, வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்து, இரவு முழுவதும் பிரகாசமாக ஒளிரும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை வானியலாளர்கள் 'வியாழனின் எதிர்ப்பு' என்று அழைக்கின்றனர். இந்த நாளில் பூமி, சூரியன் மற்றும் வியாழன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும். இந்த அரிய நிகழ்வின் போது, வியாழன் கிரகம் டாரஸ் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் தெரியும். டிசம்பர் 6 அன்று, வியாழன் பூமியிலிருந்து வெறும் 611 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். அந்த சமயத்தில், வியாழனிலிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய வெறும் 34 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இந்த அற்புத நிகழ்வை தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, வியாழனின் மேக வளையங்கள் மற்றும் அதன் நான்கு பெரிய நிலவுகளான அயோ, யூரோபா, கேனிமீட் மற்றும் காலிஸ்டோ ஆகியவற்றை நாம் தெளிவாக காணலாம். வியாழன் கிரகம் ஏற்கனவே மிகவும் பிரகாசமாக இருப்பதால், வெறும் கண்களால் பார்க்க விரும்பும் வானியல் ஆர்வலர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.