பூமிக்கு 140 மில்லியன் மைல் தொலைவில் இருந்து லேசர் செய்தியைப் பெற்று நாசா புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் சைக் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தின் முதன்மை பணி சைக் என்ற விண்கல்லை ஆய்வு செய்வதாகும். ஆனாலும், இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் அமைப்பு மூலம் லேசர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8ம் தேதி, கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கான தரவுகளை சைக் விண்கலம் லேசர் வாயிலாக பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த தகவல் பரிமாற்றம் விண்வெளி தொலை தொடர்பு சேவைகளில் முக்கிய மைல்கலாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு விண்வெளி திட்டங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் துல்லியமாகவும் எளிமையாகவும் ஏற்படுத்தப்படுவதற்கு இந்த சோதனை அடித்தளமாக அமைந்துள்ளது. சைக் திட்டத்திற்கான நாசாவின் திட்ட இயக்குனர் மீரா ஸ்ரீனிவாசன் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.