பூமியிலிருந்து 90 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியை போலவே அளவுடைய புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LP 791-18 d என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புறக்கோள், எரிமலைகளால் சூழப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இவை தொடர்ந்து வெடித்து சிதறி வருவதாகவும் கூறியுள்ளனர். அத்துடன், புறக்கோளில் காணப்படும் எரிமலைகள் வியாழன் கோளின் நிலவான Io வில் காணப்படும் எரிமலைகளை ஒத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தப் புறக்கோள் குறித்த விரிவான தகவல்கள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புறக்கோள், சிவப்பு நிற சிறிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேட்டர் விண்மீன் கூட்டத்தில் உள்ள இந்த கோளை போலவே, வேறு 2 கோள்களும் குறிப்பிட்ட இந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, பூமியை விட 20 மடங்கு பெரியதாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், LP 791-18 d புறக்கோள் தன்னைத்தானே சுற்றுவது இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கோளின் ஒரு பகுதி எப்பொழுதும் பகல் நேரமாகவும், மற்றொரு பகுதி எப்போதும் இருளாகவும் இருக்கிறது. இந்த கோள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.