இந்தியாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. குஜராத்தில் அரபிக் கடலை ஒட்டிய துவாரகா புனித நகரமும் இன்று காலையில் நிலநடுக்கத்தால் குலுங்கியது. குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.














