இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மீசோ, கிட்டத்தட்ட 251 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விதித் ஆத்ரேயா, பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “நிறுவனத்திற்கு அதிக எண்ணிக்கையில் பணியமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, பணி நீக்கம் செய்வது அத்தியாவசியமாகிறது” என கூறியுள்ளார்.
நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு விரைவில் தகவல்கள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், வெளியேற உள்ள பணியாளர்களுக்கு, அவரவர் உயர் அதிகாரிகளுடன் உரையாடுவதற்கான தனித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை வரை, வெளியேற்றப்படும் பணியாளர்களுக்கான மின்னஞ்சல்கள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான உரிய ஊதிய தொகை வழங்கப்படும் எனவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான காப்பீட்டு காலம் மார்ச் 31, 2024 வரை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.