உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, பல்வேறு பெரு நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தொழில்நுட்பத் துறையை சேர்ந்த அமேசான், சேல்ஸ் ஃபோர்ஸ், மெட்டா, ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால், இந்த நிறுவனங்களில் பெருமளவு பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை, அமெரிக்காவில் மட்டுமே 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 30 முதல் 40% ஊழியர்கள் எச் 1 பி, எல் 1 விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இதனால், விசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்கள் அமெரிக்காவில் புதிய வேலை தேடி கண்டுபிடிக்கும் இக்கட்டான சூழ்நிலையில் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வேலை கிடைக்காதவர்கள் நாடு திரும்பும் நிலை அதிகரித்து வருவதால், குளோபல் இந்தியன் டெக்னாலஜி ப்ரொபஷனல்ஸ் அசோசியேசன், பவுண்டேஷன் ஃபார் இந்தியா அண்ட் இந்தியன் டயஸ்போரா ஸ்டடிஸ் போன்ற அமைப்புகள் சமூக அடிப்படையில் புதிய வேலை கிடைப்பதற்கு உதவிகள் செய்து வருகின்றன.














