வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஈகுவடார் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஈகுவடார் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈகுவடார் நாட்டில் 8 பேர் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். அவர்களில், எதிர்க்கட்சி சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிக்கையாளருமான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று மாலை, அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தனது காரில் ஏறச் சென்றபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு, ஈகுவடார் நாட்டின் தற்போதைய அதிபர் மற்றும் சக வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.