தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் சென்னை மற்றும் கரூர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் இந்த சோதனை தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த மாதம், வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் நீட்சியாகவே இந்த சோதனை உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த சோதனையின் போது, திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், கடந்த 2011 முதல் 2015 வரை, செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.