மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு தற்போது அவர்களின் கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி உத்தரவு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013 - 14 நிதி ஆண்டிலிருந்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 1,000 முதல் 7,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களின் கல்வியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
இதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1,000 ரூபாயிலிருந்து 2,000 ஆகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4000 ரூபாயிலிருந்து 8,000 ஆகவும் உயர்த்தி உள்ளது. அதேபோல் இளங்கலை பட்டப்படிப்புக்கு 6,000 ரூபாயிலிருந்து 12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 7,000 ரூபாயிலிருந்து 14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்ட பின் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












