சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், முதன்முறையாக மின்சார பஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் என பல சிறப்புகளுடன் புதிய பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
டீசல் பஸ்களுக்கு மாற்றாக, 1225 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 625 பஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ரூ.200.40 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வியாசர்பாடி பணிமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 120 மின்சார பஸ்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார். 400 ஏ.சி அல்லாதவை, 225 ஏ.சி பஸ்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பஸ்களில் சி.சி.டி.வி., சீட் பெல்ட், மாற்றுத்திறனாளிகள் வசதி, செல் சார்ஜிங் பாயிண்ட், அவசர அலாரம், எல்.இ.டி விளக்குகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை இயக்கலாம். 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்படும் இந்த பஸ்கள், பசுமை போக்குவரத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.