ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இல்லை. இந்தியாவுக்கு நிரந்தர இருக்கை ஒதுக்கப்படாதது குறித்து டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு ஆப்பிரிக்க நாடு கூட நிரந்தர உறுப்பினராக இல்லை என கவலை தெரிவித்திருந்தார். எக்ஸ் சமூக வலைதளத்தில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிரந்தர இருக்கை இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அவர் பதிவிட்டிருந்தார். மேலும், தற்போதைய நிலவரங்களை உண்மையாக ஆராய்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம் தர வேண்டியது அவசியம் என அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு, அமெரிக்காவை சேர்ந்த இஸ்ரேல் முதலீட்டாளர் மைக்கேல் ஈசன்பர்க், இந்தியாவுக்கு ஏன் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இருக்கை கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து, டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், ‘உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுக்கு இடம் இல்லாதது நகைப்புக்குரியதாக உள்ளது’ என விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.














