டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்திருந்தார். பின்னர், அந்த முடிவை கைவிடுவதாக கூறினார். இது உலக அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நிறுவனத்தை கையகப்படுத்த அக்டோபர் 28ஆம் தேதி வரை நீதிமன்ற அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே, 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற எலான் மஸ்க்குக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் மீதம் உள்ளது.
இந்நிலையில் அவர் எவ்வாறு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளார் என்பதை அமெரிக்க பெடரல் அதிகாரிகள் உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர். மேலும், பணத்தை கொடுப்பது குறித்தும், அவரது நடவடிக்கை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்ற அறிக்கையில் தெரிவித்திருந்தது. குறிப்பாக, எலான் மஸ்கின் சட்டக் குழு மீது முழு கவனமும் உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல் காணொளி ஒன்றை ஃபெடரல் ஆணையத்திடம் காண்பிக்க எலான் மஸ்கின் சட்ட குழு தவறி உள்ளதை ட்விட்டர் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. எனவே, சி என் என் அறிக்கை படி, “இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் இரண்டு வகையான சாத்தியக்கூறுகளும் உள்ளன. எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும் கூடும்” என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய எலான் மஸ்கின் சட்ட ஆலோசகர் அலெக்ஸ் ஸ்பைரோ, “இந்த விவகாரம் தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் ட்விட்டர் நிறுவனமே பொறுப்பாகும். அவர்களின் தவறான நடவடிக்கைகளால் இத்தகைய பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு விலை 54.2 அமெரிக்க டாலர் விலையில் வாங்கவே எலான் மஸ்க் ஒத்துக் கொண்டுள்ளார் என்று தெளிவுபட கூறினார். இந்த ஒப்பந்தம் மூலம், சந்தையில் பெரும் மாற்றம் நிகழும் என்பதால், அனைவரும் இந்த விவகாரத்திற்கான முடிவு குறித்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.