எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனம், மனித மூளையை கணினியுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது. மூளையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளை சரி செய்யும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பொருட்டு, மனித மூளையில் சிப் ஒன்றை வைத்து, ஆறு மாத காலத்திற்கு பரிசோதனை செய்ய, அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் நியூரோலிங் அனுமதி கோரியுள்ளது. இது யதார்த்தத்தில் சாத்தியமற்றதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய எலான் மஸ்க், "முதற்கட்டமாக, நியூரோலிங் 2 செயல் திட்டங்களை முன்மொழிகிறது. முதலாவது, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மூளையில் சிப் வைத்து, பார்வையை சரி செய்வது. மற்றொன்று, தசைகளை அசைக்க முடியாதவர்களுக்கு மூளை சிப் மூலம் உதவிகள் செய்வது. இவற்றைத் தொடர்ந்து, கழுத்து பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, மூளைக்கும் முதுகு தண்டுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களுக்கு, சிப் மூலம் இணைப்பு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மூளை சிப் மூலம், முழு உடலும் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும்" என்று கூறினார்.