டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். அதை தொடர்ந்து, தற்போது, டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த வருட நவம்பர் முதல் இதுவரை 36 பில்லியன் மதிப்பிலான டெஸ்லா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் வசம் வெறும் 14% பங்குகளே எஞ்சியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 3.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த விற்பனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்த அதிக செலவுகள் ஏற்பட்டது. அதனை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.