உயர்மட்ட நிர்வாகிகளை நீக்கிய பிறகு, எலோன் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களுக்கு 100 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கொடுப்பதைத் தவிர்க்க உள்ளார் என தகவல் வந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு மஸ்க்கின் முதல் நடவடிக்கை, நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நீக்குவதாக உள்ளது. டெஸ்லா உரிமையாளரான மஸ்க் ட்விட்டர் விளம்பரதாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சமூக ஊடகங்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி கருத்துக்களை பிரதிபலிக்கும் கருவிகளாக இருப்பதன் மத்தியில், 'மனிதகுலத்திற்கு உதவ' ட்விட்டரை வாங்கியதாகக் கூறினார். அதன்பிறகு, அவர் எடுத்த முதல் சில முடிவுகள், தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் தலைமைச் சட்ட அதிகாரி விஜயா காடே ஆகியோரை நீக்குவது என்பதாகும்.
இதற்கிடையே, மஸ்கின் நிதிப் பொறுப்புகள், குறிப்பாக பணியாளர் இழப்பீடு மற்றும் வணிகத்திற்கான பணப்புழக்கத்தை பராமரிப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ட்விட்டரின் 7,500 பணியாளர்கள் நிறுவனத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு பெற முடியும் என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
மேற்கூறிய மூன்று பணிநீக்கம் செய்யப்பட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கு மஸ்க் $200 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக இழப்பீடு செலுத்த வேண்டும். நவம்பர் 2021 இல் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக அகர்வால் பொறுப்பேற்றபோது இது உறுதி செய்யப்பட்டது. இதனை குறிக்கும் வகையில் அவர் ஒரு 'கோல்டன் பாராசூட்' விதியுடன் வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ட்விட்டருடனான ஒப்பந்தத்தில், அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறு ஏற்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணத்தைப் பெறுவார்களா என்ற தெளிவின்மை தொடர்ந்தாலோ சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய்கிழமைக்கு முன்னர் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தால், மஸ்க் பணம் செலுத்த வேண்டும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அந்த நாளில் இழப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
ட்விட்டரைக் கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே, மஸ்க் 'பறவை விடுவிக்கப்பட்டது' என ட்வீட் செய்தார். இதன் மூலம் சுதந்திரமான பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பணக்காரர்கள் பட்டியலின்படி, மஸ்கின் சொத்து மதிப்பு 221.3 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.