எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பை கட்டமைத்து வருகிறது. இந்த கட்டமைப்பால் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
புற ஊதா கதிர்களில் இருந்து பூமியை பாதுகாப்பதற்கு ஓசோன் படலம் முக்கிய பணியை செய்கிறது. ஓசோன் படலம் இல்லை என்றால், சூரியனில் இருந்து வரும் நேரடி கதிர்கள் மூலம் தோல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். இந்த நிலையில், ஜியோ பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை ஒன்றில், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் கணிசமான அளவு அலுமினியம் ஆக்சைடு வாயு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது. இது ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த உயரத்தில் நிறுவப்படும் செயற்கைக்கோள்கள் குறைந்த ஆயுள் கொண்டவை. அவற்றின் ஆயுட்காலம் நிறைவடைந்த பிறகு, அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் விழுகின்றன. அப்போது அவை முழுமையாக எரிகின்றன. அந்த சமயத்தில் அலுமினியம் ஆக்சைடு வாயு வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.