இந்தியாவில் 200க்கும் அதிகமான திரவ எரிவாயு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எஸ்ஸார் குழுமம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரசாந்த் ரூயா, இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அத்துடன், எஸ்ஸார் குழுமம், இந்தியாவில் பசுமை அமோனியா உற்பத்தியில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை அமோனியா, பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு செரிவூட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் எஸ்ஸார் குழுமம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு சரக்கு வாகனங்கள் திரவ எரிவாயு கொண்டு இயக்கப்படுகின்றன. எனவே, எரிவாயு நிலையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதன் பொருட்டே, அதிக எண்ணிக்கையிலான எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக எஸ்ஸார் குழுமம் தெரிவித்துள்ளது. அத்துடன், முக்கிய நகரங்கள் அல்லாத பிற பகுதிகளில் நிலையங்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் எளிய நுகர்வோர்கள் பயனடைவர் என தெரிவித்துள்ளது.